எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி.! முதல்வர் அறிவிப்பு .!
பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் (98) மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலை இயற்கை எய்தினார். கும்பகோணத்தில் 1925ஆம் ஆண்டு ஆக.7ம் தேதி பிறந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பள்ளி படிப்புகளை ஆகவே முடித்துக்கொண்டு, பல்வேறு கல்லூரிகளில் பயின்ற அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்பட்ட வேளாண் விஞ்ஞானி ஆவர். வேளாண் சார்ந்த ஆராய்ச்சிக்காக சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தலைவர், மத்திய வேளாண் துறை முதன்மை செயலாளர், சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவன தலைவர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். இந்த சூழலில் அவரது மறைவு அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவிற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலினின் இரங்கல் குறிப்பில், பசிப்பிணி ஒழிப்பு -உணவுப் பாதுகாப்பு என்ற இரு குறிக்கோள்களுக்காகக் கடந்த முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பணி ஆற்றி வந்த தலைசிறந்த வேளாண் அறிவியலாளர் திரு. எம்.எஸ் சுவாமிநாதன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். அவரது இழப்பு அறிவியல் துறைக்கும், தமிழ்நாட்டுக்கும் ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும்.
மிகப்பெரும் ஆளுமையை இழந்து தவிக்கும் அறிவியல் உலகினருக்கும் அவரது குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுள்ளார். இந்த நிலையில், உலகம் போற்றும் விஞ்ஞானியாக சுற்றுச்சூழல் – வேளாண்மைத்துறையில் அளப்பரிய பங்காற்றிய சுவாமிநாதனை கௌரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.