வாக்கு பெட்டியை தீ வைத்த சம்பவத்தில் 50 பேர் மீது வழக்கு பதிவு.!

- திருவள்ளூர் மாவட்டம் பாப்பரம்பாக்கம் வாக்குச்சாவடியில் உள்ள வாக்கு பெட்டியை சில மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர்.
- இதுதொடர்பாக போலீசார் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கலவரத்தில் ஈடுபட்டதாக இன்று 50 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 156 ஒன்றியங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கும்போது பாப்பரம்பாக்கத்தில் வாக்குச் சாவடியில் இருந்த வாக்கு பெட்டியை சில மர்ம நபர்கள், வாக்குச்சாவடியில் இருந்து வெளியே எடுத்து வந்து தீ வைத்து கொளுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
அதாவது இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டுகளின் பின்புறம் தேர்தல் ஆணையம் பதித்திருந்த முத்திரை, முன்புறம் ஒரு குறிப்பிட்ட சின்னத்தின் மீதும் பதிவாகியிருந்ததாக புகார் எழுந்தது. அதனால் வாக்குப் பதிவு மையத்துக்குள் புகுந்த சிலர் வாக்குப்பெட்டிகளை கைப்பற்றி வாக்குச் சீட்டுகளுக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வாக்குப்பதிவு அங்கு நிறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கலவரத்தில் ஈடுபட்டதாக இன்று 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே இங்கு மறு வாக்குப் பதிவு குறித்து மாநிலத் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.