நாளை 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம்.. “புன்னகை” திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர்!
மாணவர்களுக்கு ஏற்படும் வாய்வழி தொற்று நோய்களை தடுக்க புன்னகை திட்டம் தொடக்கம்.
சென்னையில் அரசு பள்ளி மாணவர்களின் பல் பாதுகாப்பு திட்டமான புன்னகை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. புன்னகை திட்டத்தை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதல்கட்டமாக 6,7,8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பல் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
மாணவர்களுக்கு ஏற்படும் வாய்வழி தொற்று நோய்களை தடுக்க புன்னகை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தொடங்கி வைத்த பின் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெற உள்ளது என அறிவித்தார்.
நாட்டில் தற்போது அதிகரித்து வரும் எச்3என்2(H3N2) வைரஸின் தாக்கம், மீண்டும் மக்களை பீதியடைய வைத்துள்ளது. H3N2 வைரசுக்கு கிட்டத்தட்ட தொண்டை புண், காய்ச்சல், மூக்கு ஒழுகுதல் போன்றவை அறிகுறிகள் என கூறப்படுகிறது. இந்த வைரஸ் தமிழகத்திலும் பரவி வருகிறது. இதனால், அரசும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த சமயத்தில் நாளை சென்னையில் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெறவுள்ளது.