3 பேரை பலி வாங்கிய ஃபெஞ்சல் புயல்! மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு!
கடந்த 25 தேதி காற்றழுத்த பகுதியாக தொடங்கி ஃபெஞ்சல் புயல் சென்னையில் 3 பேரை பலி வாங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஃபெஞ்சல் புயலானது தற்போது கரையை கடந்து கொண்டிருக்கிறது. மாமல்லபுரம் – காரைக்கால் பகுதிக்கு இடையே கரையை கடந்து வரும் புயலால் அப்பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இன்று இரவுக்குள் முழுவதுமாக புயல் கரையை கடந்துவிடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பல இடங்களில் சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் சில இடங்களில் மின் வயர்கள் கீழே விழுந்து தொங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால், மின்சாரம் தாக்கி மொத்தமாக இதுவரை 3 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்று காலை ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஏ.டி.எம்.,ல் பணம் எடுக்கச் சென்ற வட மாநில வாலிபர் சந்தன் என்பவர் மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
சென்னை வேளச்சேரியை சேர்ந்த சக்திவேல் என்னும் 45 வயது நபர், மின்சாரம் தாக்கி பலியானார். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஒரு நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை 3 பேரை ஃபெஞ்சல் புயல் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.