கொரோனாவால் உயிரிழந்த பெண் நீதிபதி – 25 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவு!
வனிதா எனும் பெண் நீதிபதி கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் இவரது மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், அவரது குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 55 வயதுடைய நீதிபதி வனிதா திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த நிலையில், அண்மையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அதாலத் நீதிமன்றத்தின் நிரந்தர தலைவராக மே 5ஆம் தேதி பொறுப்பேற்றுள்ளார். அன்றைய தினமே அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்படவே மீண்டும் தூத்துக்குடி திரும்பியுள்ளார். பின் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இரு தினங்களிலேயே உயிரிழந்துள்ளார்.
தற்போது இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள இரங்கல் தெரிவித்துள்ளதுடன், அவரது குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கொரோனா நோய் தொற்று காரணமாக தஞ்சாவூர் மாவட்ட மக்கள் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி வனிதா சிகிச்சை பலனின்றி மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நீதித் துறை அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 25 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் தம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.