பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை – முன்னாள் சிறப்பு டிஜிபி இன்று நேரில் ஆஜர்!
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இன்று விசாரணை.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின்பேரில் முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் முன்னாள் எஸ்.பி. மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கானது விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் எஸ்.பி. விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆஜரான நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை.
இதனைத்தொடர்ந்து, வழக்கு விசாரணையை வருகிற 7-ஆம் தேதி இன்றைக்கு ஒத்திவைத்து நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டாா். இந்த நிலையில், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது. விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி. ஆகியோர் ஆஜராக உள்ளனர்.
இதனிடையே, இந்த வழக்கை வருகிற டிசம்பா் 20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்றம் தெரிவித்த நிலையில், வழக்கு விசாரணை வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் டிஜிபி, முன்னாள் எஸ்.பி. ஆகியோா் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா் என்பது குறிப்பித்தக்கது.