நீட் தேர்வுக்கு தயாராகி வந்த பெண் மருத்துவர் தற்கொலை…!
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த பெண் மருத்துவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அபிஷேக் என்பவரது மனைவி ராசி. அபிஷேக் கோபிசெட்டிபாளையத்தில் ஜவுளி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது. ராசி 2020 ஆம் ஆண்டு இளநிலை மருத்துவப் பட்டம் பெற்ற நிலையில், மேற்கொண்டு பிஜி படிப்பிற்காக நீட் தேர்வு எழுத தயாராகி வந்துள்ளார்.
மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதி உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கி தேர்வுக்கு படித்து வந்த நிலையில், நேற்று மருத்துவர் ராசி வீட்டின் மூன்றாவது மாடியில் படிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அப்போது அவர் அங்கு மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை அடுத்து அவரது தாயார் நீண்ட நேரமாகியும் ராசி அறையிலிருந்து வெளியே வரவில்லை என்று சந்தேகமடைந்த நிலையில் ஜன்னல் வழியாக பார்த்தபோது அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு விரைந்த காவல்துறையினர் கதவை உடைத்து மருத்துவர் ராசி உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவரின் தற்கொலைக்கு காரணம் குடும்பப் பிரச்சனையா அல்லது நீட்தேர்வு அச்சமா என்பது தொடர்பாக இரு வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.