மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தல்!
கூடங்குளத்திலேயே அணுக்கழிவு மையத்துக்கு அனுமதி அளித்துள்ளதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தல்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற தலைவரும், நெல்லை மாவட்டம் ராதாபுரம் எம்எல்ஏயுமான அப்பாவு, கூடங்குளம் அணுக்கழிவுகளை இப்பகுதியில் வைக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் வரை சென்று போராட்டம் நடத்தினர். மக்கள் சார்பாக நானும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும், இல்லாதபோதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளேன்.
எனவே, அணு உலைகளின் அணுக்கழிவுகளை அங்கேயே சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் சார்பாக வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார். மக்கள் வாழாத பகுதிகளில் அணுக்கழிவுகளை சேமிப்பதே சிறந்த வழி எனவும் குறிப்பிட்டார்.
தொகுதி மக்களும், இந்திய மக்களின் நலன் குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் மக்கள் அதிகம் வாழாத பகுதி எங்கே இருக்கிறதோ அங்கு அணுக்கழிவுகளை சேமிக்க வேண்டும் எனவும் கூறினார். கூடங்குளத்திலேயே அணுக்கழிவு மையத்தை அமைப்பது மிகவும் ஆபத்தானது என்றும் எச்சரித்தார்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் மூன்று மற்றும் நான்காவது அணு உலைகளின் அணுக்கழிவுகளை அங்கேயே சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியதை அடுத்து, அணுசக்திக்கு எதிரான போராட்டக் குழு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.