பிப்.8 திமுக எம்பிக்கள் கருப்பு சட்டை ஆர்ப்பாட்டம்!
வரும் 8-ஆம் தேதி திமுக எம்பிக்கள் கருப்பு சட்டை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என டி.ஆர். பாலு அறிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதன்பின், பிப்.1ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சூழலில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில், ஜார்கண்ட் முதல்வர் விவகாரம், சண்டிகர் மேயர் தேர்தல் மற்றும் பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
த.மா.க யாருடன் கூட்டணி? – வரும் 12ல் முடிவு.!
இந்த நிலையில், வரும் 8-ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு திமுக எம்பிக்கள் கருப்பு சட்டை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு அறிவித்துள்ளார். முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவின்படி, நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
அப்போது, தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்றுள்ளார். மேலும், தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட புயல் வெள்ளத்துக்கு ரூ.37 ஆயிரம் கோடி தரவேண்டும் என்ற கோரிக்கை பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, தமிழ்நாடு ஆளுநர் விவகாரம், சென்னை மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் உள்ளிட்டவைகளை வலியுத்தியும் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறியுள்ளார்.