முதல்வருக்கு விவசாயிகள் நன்றி! ஜன.3 முதல் பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்!
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் என அறிவித்த முதலமைச்சருக்கு விவசாயிகள் சங்கம் நன்றி.
பொங்கல் பரிசு தொகுப்புகள் டோக்கன் வழங்கும் பணி ஜனவரி 3-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜனவரி 3-ஆம் தேதி முதல் பணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொங்கல் தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் மற்றும் மக்களின் கோரிக்கைகளை ஏற்று கரும்பு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, ரூ.1,000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சக்கரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கரும்பும் சேர்க்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுடன் கரும்பு சேர்க்கப்பட்டுள்ளதால் அரசுக்கு கூடுதலாக ரூ.71 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதனிடையே, பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் என அறிவித்த முதலமைச்சருக்கு விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.