விவசாயிகளை பிற உரங்கள் வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது;மீறினால் கடும் நடவடிக்கை – தமிழக அரசு எச்சரிக்கை!

Default Image

தனியார் உரக்கடைகள் பிற உரங்களை கட்டாயம் வாங்க வேண்டும் என்று விவசாயிகளை கட்டாயப்படுத்தக்கூடாது என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தனியார் உரக்கடை உரிமையாளர்கள் யாரும் விவசாயிகள் கேட்காத உரங்களை வாங்க நிர்பந்திக்கக்கூடாது,மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வேளாண்மை-உழவர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும்,இது தொடர்பாக வேளாண்மை-உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

“தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக சம்பா (இராபி) பருவத்தில் 13.747 இலட்சம் எக்டரில் நெல் சாகுபடி மேற்கொள்ள திட்டமிட்டதில், இதுநாள் வரை 9.717 இலட்சம் எக்டர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பா நடவுப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதால், குறித்த காலத்தில் உரங்களை விநியோகிக்கும் பொருட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் உரக்கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு உரம் தொடர்பான புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விவசாயிகள் தாங்கள் தனியார் உரக்கடைகளில் உரங்கள் வாங்கும் போது, தனியார் உரக்கடை நிறுவனத்தினர் விவசாயிகள் கேட்காத பிற உரங்களை / இடுபொட்களை வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுவதாகவும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.எனவே,தனியார் உரக்கடை உரிமையாளர்கள் யாரும் விவசாயிகள் கேட்காத உரங்களை வாங்க நிர்பந்திக்கக்கூடாது என எச்சரிக்கப்படுகிறார்கள்.மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

28.10.2021 அன்று மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் தனியார் மற்றும் கூட்டுறவு உரக்கடை உள்ளிட்ட 3,040 உரக்கடைகளில் வேளாண்மைத்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் இணைந்த சிறப்புக் குழுவினருடன் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் உரம் இருப்பு, நிர்ணயிக்கப்பட்ட விலையில் உரங்களை விற்பனை செய்தல் மற்றும் விற்பனை முனைய கருவியின் வாயிலாக பட்டியலிட்டு உரங்களை விற்பனை செய்தல் மற்றும் உரம் பதுக்கல் முதலான பணிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.உரம் இருப்பு மற்றும் விற்பனை விலை குறித்த தகவல் பலகை பராமரிக்காத 20 உரக் கடைகள் எச்சரிக்கப்பட்டது.

நாகப்பட்டினம் ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 44 கூட்டுறவு உள்ளிட்ட உரக்கடைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் அரசு வழிகாட்டுதல் முறைகளை பின்பற்றாமல் உரம் விற்பனை செய்த 20 உரக்கடை உரிமையாளர்கள் மீது உரக்கட்டுப்பாட்டு ஆணை, 1985- ன் படி விளக்கம் கோரப்பட்டுள்ளது. இதுபோன்று, இதர மாவட்டங்களில், புத்தக இருப்பு மற்றும் விற்பனை முனைய கருவியில் உள்ள இருப்பிற்கும் வித்தியாசம் காணப்பட்ட 19 உரிமையாளர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

கணக்கில் வராத கூடுதலாக உரம் இருப்பு வைத்துள்ள 7 உரக்கடை உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்கும் குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து சட்டப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படும்.

உர இருப்பு வித்தியாசம், சரியாக இருப்பு பதிவேடுகள் பராமரிக்காமை மற்றும் “O” படிவம் ஒப்புதல் பெறாமல் உரம் விற்பனை செய்தல் ஆகிய குறைபாடுகளுக்காக 64 உரக்கடைகளுக்கு தற்காலிக விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒன்றிய அரசிற்கு அக்டோபர் மாதம் 22-ஆம் தேதி எழுதிய கடிதத்தினை தொடர்ந்து ஒன்றிய அரசால் தமிழ்நாட்டிற்கு நவம்பர் மாதத்திற்கு தேவையான யூரியா 1,24,750 மெ. டன், டிஏபி 34,350 மெ. டன், பொட்டாஷ் 11,500 மெ. டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 85,900 மெ. டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு நவம்பர் மாதத்தில் சம்பா பருவத்திற்கு தேவையான உரங்கள் தங்கு தடையின்றி சீராக கிடைத்திட உரக்கடைகளில் ஆய்வு, செய்து தொடர்ந்து கண்காணிக்கப்படும்”, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi