விருப்பம் இருந்தால் மட்டுமே தனியாரிடம் விவசாயிகள் ஒப்பந்தம் செய்யலாம் – ககன்தீப்சிங் பேடி
விருப்பம் இருந்தால் மட்டுமே தனியாரிடம் விவசாயிகள் ஒப்பந்தம் செய்யலாம் என்று வேளாண்துறை முதன்மை செயலர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் வேளாண்துறைச் முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர். அப்போது, அமைச்சர் துரைக்கண்ணு கூறுகையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் விவசாயிகளின் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதற்காகவே இந்த சட்டங்களை முதல்வர் ஆதரித்தார் என்று கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து பேசிய வேளாண்துறை முதன்மை செயலர் ககன்தீப்சிங் பேடி, ஒப்பந்த வேளாண் சட்டத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது தமிழகம்தான். தற்போது, மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது. விலை உறுதி அளிப்பு பண்ணை ஒப்பந்த சட்டத்தை தமிழக அரசு 2019-ம் ஆண்டு சட்டமன்றத்தில் கொண்டு வந்தது. இந்த ஒப்பந்த வேளாண்மை முறையில் விளைப் பொருட்களுக்கான விலையை முன்கூட்டியே நிர்ணயிக்கலாம். விருப்பம் இருந்தால் மட்டுமே தனியாரிடம் விவசாயிகள் ஒப்பந்தம் செய்யலாம். கட்டாயம் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.