வனத்துறையினர் தாக்கி விவசாயி உயிரிழந்த வழக்கு.. 8 நாட்களுக்கு பிறகு உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள்!
வனத்துறையினர் தாக்கி விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்த நிலையில், அவரின் உடலை எட்டு நாட்களுக்குப் பிறகு உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.
தென்காசி மாவட்டம் வாகைக்குளத்தில் கடந்த 22-ம் தேதி வனத்துறையினரால் தாக்கி, விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்தார். இந்த வழக்கை மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது. அந்த வழக்கில் சம்பந்தபட்ட வனத்துறை அதிகாரியை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என உறவினர்கள் மறுப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த முத்துவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய அவரின் மனைவி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு, கடந்த 28-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அதில் விவசாயி முத்துவின் உடலில் 4 இடங்களில் காயங்கள் காயங்கள் இருந்தது உறுதியானது.
இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை, உயிரிழந்த முத்துவின் உடலை மறு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்ட நிலையில், எட்டு நாட்களுக்குப் பிறகு உடலை வாங்கிக் கொள்ள உறவினர்கள் ஒப்புதல் தெரிவித்து, உடலை பெற்றுக்கொண்டனர்.