பிரபல ரவுடி தூத்துக்குடி ஐகோர்ட் மகாராஜா சென்னையில் துப்பாக்கியில் சுட்டுப்பிடிப்பு.!
வேளச்சேரி ஆதம்பாக்கம் அருகே நகைக்கடை அதிபரை கடத்தி கொலை செய்ய முயன்ற வழக்கில் ரவுடி மகாராஜா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை : பிரபல ரவுடி தூத்துக்குடியைச் சேர்ந்த ஐகோர்ட் மகாராஜா சென்னையில் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டார். சென்னை கிண்டியில் பதுங்கியிருந்த இவரை போலீசார் தேடிச் சென்றபோது, காவல்துறையினரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரவுடி தூத்துக்குடி மகாராஜாவிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, ஐகோர்ட் மகாராஜா மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வேளச்சேரி ஆதம்பாக்கம் அருகே நகைக்கடை அதிபரை கடத்தி கொலை செய்ய முயன்ற வழக்கில் ரவுடி மகாராஜா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இவர், அண்மையில் நகைக்கடை அதிபரை கடத்திய வழக்கில் இவர் மூளையாக செயல்பட்டவர் என்றும் தெரிய வந்துள்ளது.
முன்னதாக நேற்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சித்திரப்பாடியில் தப்பியோட முயன்ற கொள்ளையனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். அதாவது, தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து, பொதுமக்கள் நடமாடி முடியாத அளவில் சட்ட-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல் எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் ஆளும் திமுகவை குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தான், நேற்று கடலூர், இன்று சென்னை என அடுத்தடுத்து ரவுடிகள் மீது, போலீசாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.