பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்!
பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் (98) மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். கும்பகோணத்தில் 1925ஆம் ஆண்டு ஆக.7ம் தேதி பிறந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலை 11.20க்கு காலமானார். இந்தியாவில் பசுமைப்புரட்சிக்கு வித்திட்டவர்களில் முதன்மையானவர் எம்.எஸ்.சுவாமிநாதன். பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்பட்ட வேளாண் விஞ்ஞானி ஆவர்.
பல்வேறு கல்லூரிகளில் பயின்ற எம்.எஸ்.சுவாமிநாதன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். வேளாண் சார்ந்த ஆராய்ச்சிக்காக சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராகவும் எம்.எஸ்.சுவாமிநாதன் பணியாற்றியுள்ளார். இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தலைவராக 1972 முதல் 1979 வரை பகித்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.
இதுபோன்று, 1979 முதல் 1980 வரை மத்திய வேளாண் துறை முதன்மை செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவன தலைவராகவும் 1982ல் இருந்து 1988 வரை பதவி வகித்தவர். சர்வதேச இயற்கை மற்றும் இயற்கை வள பாதுகாப்பு அமைப்பின் தலைவராகவே 6 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். அதிக விளைச்சல் தரும் புதிய நெல் ரகங்களை அறிமுகப்படுத்தி நெல் உற்பத்தியை பெருக்க வழிவகை செய்தவர். நாட்டின் அரிசி, கோதுமை விளைச்சலை அதிகரிப்பதற்கான பசுமை புரட்சி திட்டங்களை செயல்படுத்தியவர்.
மூன்று பத்மபூஷன் விருதுகள் மற்றும் எஸ்எஸ் பட்நாகர் உள்ளிட்ட விருதுகளை பெற்று பெருமை சேர்த்துள்ளார். மேலும், மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவையடுத்து, அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.