“முல்லைப் பெரியாறு அணை குறித்த தவறான பிரச்சாரம்;தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட வேண்டும்”- ஓபிஎஸ் கோரிக்கை..!

Default Image

முல்லைப் பெரியாறு அணை பழமையானது என்றும்,அதிக அளவில் தண்ணீர் தேக்கி வைத்தால் அணைக்கு சேதம் ஏற்படும் என்றும் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

கேரள அரசுடனான நல்லுறவை பேணி பாதுகாக்கும் அதே வேளையில் முல்லை பெரியாறு பாசன விவசாய பிரதிநிகளுடன் கலந்து ஆலோசித்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தேவையான அனைத்து நடவக்கைகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் நீர்பாசனத்திற்கு ஆதாரமாக விளங்குகின்ற முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை எப்படியாவது குறைக்க வேண்டும் என்பதற்காக அந்த அணை பாதுகாப்பானதல்ல என்ற நியாயமற்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதோடு, இது குறித்து கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் அறிக்கை ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தென் தமிழ்நாட்டு மக்களின் ஜீவாதாரப் பிரச்சனையாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்த மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மிகப் பெரிய சட்டப் போராட்டம் நடத்தியதன் காரணமாக அணையின் நீர்மட்டத்தினை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளவும், அணை வலுப்படுத்தப்பட்ட பிறகு 152 அடியாக உயர்த்திக் கொள்ளவும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.

இதன் அடிப்படையில்,மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சிக் காலத்திலேயே முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 142 அடி வரை உயர்ந்தது.இந்தச் சூழ்நிலையில், முல்லைப் பெரியாறு அணை பழமையானது. என்றும், சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்டது என்றும், அதிக அளவில் தண்ணீர் தேக்கி வைத்தால் அழுத்தம் தாங்காமல் அணைக்கு சேதம் ஏற்படும் என்றும், அணை பூகம்ப பாதிப்பு பகுதியில் அமைந்துள்ளது என்றும், அணை ஒட்டியுள்ள பகுதிகளில் 50 இலட்சம் மக்கள் அச்சத்தில் உள்ளனர் என்றும், எனவே, இந்த அணை பாதுகாப்பானது என கண்காணிப்புக் குழு கூறியுள்ளதை முழுமையாக நிராகரிப்பதாகவும் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இது மட்டுமல்லாமல், புதிய அணை கட்டப்படுவதே அடுத்த நியாயமான நடவடிக்கை என்றும் உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது.

மேலும், அக்டோபர் மாதம் இறுதி வரை கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டி, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து அதிகத் தண்ணீரை திறக்க உத்தரவிட வேண்டுமென்றும் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் கோரியுள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கிக் கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் கேரள அரசு இது மாதிரியான முறையீட்டினை உச்ச நீதிமன்றத்தில் வைத்திருக்கிறதோ என்ற ஐயம் தென் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் நிலவுகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டினாலும் அணை பாதுகாப்பாகவே இருக்கும் என நிபுணர்கள் கருத்துக்கள் தெரிவித்துள்ள நிலையில், பல்வேறு ஆய்வுகள் கூறுகின்ற நிலையில், இது குறித்த வழக்கு விசாரணை வருகின்ற நவம்பர் மாதம் 11-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வரும் போது கேரள அரசின் தவறான பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் வலுவான வாதங்களை திறமையான வழக்கறிஞர்கள் மூலம் வைக்க வேண்டும் என்பதும், அதே சமயத்தில் கேரளாவுடனான நல்லுறவு பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் தென் தமிழ்நாட்டு விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, கேரள அரசுடனான நல்லுறவை பேணிப் பாதுகாக்கும் அதே வேளையில், முல்லைப் பெரியாறு பாசன விவசாயப் பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்”,என்று வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்