அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மூடல்!
கொரோனா பரவல் கடலூர் மாவட்டத்தில் அதிகளவில் பரவி வரக் கூடிய சூழ்நிலையில், சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலை மூடப்பட்டது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில், அங்கு உள்ள மிகப்பெரிய தொழிற்சாலையான சிப்காட் தொழிற்சாலையில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகள் நடைபெற்று வந்தது.
இதை தொடர்ந்து அங்கு பலருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 4ஆம் தேதி 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தின் குடிகாடு கிராமத்தில் இயங்கி வரக்கூடிய சிப்காட் தொழிற்சாலை தற்போது மூடப்பட்டு உள்ளது. தொழிற்சாலை 15 நாட்களுக்கு கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பாக தொடங்க வேண்டும் என கிராம மக்களும் வலியுறுத்தியுள்ளனர்.