மிகுந்த வேதனை அளிக்கிறது- துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவரின் உடலை கீழ்பாக்கம் மயானத்தில் அடக்கம் செய்ய ஊழியர்கள் முற்பட்டபோது, அப்பகுதி மக்கள் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். பின்னர் மருத்துவரின் உடல் வேறு இடத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது.இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் இது குறித்து துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,கொரோனா அறப்போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கும் மருத்துவர்களை நல்லடக்கம் செய்வதில் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. நமக்காக உயிரை பணயம் வைத்து போராடிய மருத்துவர்களின் அர்ப்பணிப்பிற்கு நாம் தலைவணங்கி மனிதநேயம் காக்க அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
கொரோனா அறப்போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கும் மருத்துவர்களை நல்லடக்கம் செய்வதில் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
நமக்காக உயிரை பணயம் வைத்து போராடிய மருத்துவர்களின் அர்ப்பணிப்பிற்கு நாம் தலைவணங்கி மனிதநேயம் காக்க அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.— O Panneerselvam (@OfficeOfOPS) April 21, 2020