“மிகுந்த மன வேதனை;அரசே…சட்டப்படி நடவடிக்கை எடு” – ஓபிஎஸ் வலியுறுத்தல்!

Default Image

புதுக்கோட்டை நார்த்தாமலை அருகே துப்பாக்கிக்குண்டு பாய்ந்து சிறுவன் புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்ததாகக் கூறி ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும்,இதற்கு காரணமானவர்கள் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.

புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு துப்பாக்கி சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில்,கடந்த ஆண்டு டிச.30 ஆம் தேதியன்று நடைபெற்ற பயிற்சியின்போது தவறுதலாக துப்பாக்கி சூடு பயிற்சி மையத்திற்கு சற்று தொலைவில் வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டு இருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்தது.

இதனையடுத்து,சிறுவன் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.குண்டு பாய்ந்த சிறுவன் புகழேந்திக்கு  புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில்,தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,பின்னர் புதுக்கோட்டை மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து,5 நாட்களாக சிகிக்சை பெற்று வந்த சிறுவன் புகழேந்தி சிகிக்சை பலனின்றி நேற்று மருத்துவமனையில் உயிரிழந்தார். இது சிறுவனின் பெற்றோர்,உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனைத் தொடர்ந்து,சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

இதற்கிடையில்,பயிற்சியில் ஈடுபட்ட மத்திய தொழிலாக பாதுகாப்பு படையினர்,தமிழக காவல்துறையினரிடம் கோட்டாட்சியார் தண்டாயுதபாணி விசாரணை நடத்தியிருந்தார்.அதன்பின்னர், துப்பாக்கிக்குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்தது தொடர்பான கோட்டாட்சியாரின் விசாரணை அறிக்கை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில்,மத்திய தொழிலகப்பாதுகாப்புப் படை வீரர் ஒருவரின் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய தோட்டா சிறுவன் புகழேந்தியின் தலையில் பாய்ந்து,சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்ததாகவும்,உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக,தனது இரங்கல் அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

“புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் உள்ள துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் 30-12-2021 அன்று துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரின் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய தோட்டா இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பதினோறு வயது சிறுவன் புகழேந்தியின் தலையில் பாய்ந்து, ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த நிகழ்விற்கு காரணமானவர்கள் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்