மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு..!
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க பிப்ரவரி 15ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.
தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அக்டோபர் 6-ஆம் தேதி மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி,நவ. 28ம் தேதி முதல் மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.
இதற்காக 2,811 மின் பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் இணைப்புடன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், நேற்று முன்தினம் மாலை வரை 2.34 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க பிப்ரவரி 15ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஒரு மாதம் அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் மேலும் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மின் இணைப்புடன் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதார் எண்ணை இணைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 76 நாட்களில் 2.67 கோடி பேரில் 2.42 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளனர். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இதுவரை 90.69 சதவீதத்தினர் இணைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.