ஓபிஎஸ்-ஐ கட்சியிலிருந்து நீக்கியது நியாயமற்றது – ஓபிஎஸ் தரப்பு
எந்த வாய்ப்பு அளிக்காமல் காரணத்தையும் கூறாமல் கட்சியிலிருந்து நீக்கியது நியாயமற்றது என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதம்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை மற்றும் கடந்த வருடம் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்குகள் விடுமுறை நாளான இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதம்
அதிமுக வழக்கில் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதங்களை முன்வைத்தார். அந்த வகையில் அவர், அதிமுகவில் ஓபிஎஸ் எவ்வளவு முக்கியமானவர் என்பது குறித்து விவரித்து வருகிறார்.
எம்ஜிஆரின் நோக்கத்திற்கு விரோதமானது
அவர் கூறுகையில், எந்த வாய்ப்பு அளிக்காமல் காரணத்தையும் கூறாமல் கட்சியிலிருந்து நீக்கியது நியாயமற்றது. பெரும்பான்மை உள்ளது என்பதற்காக எடுத்த முடிவு கட்சி நிறுவனர் எம்ஜிஆரின் நோக்கத்திற்கு விரோதமானது.
இரட்டை தலைமையை கலைக்கும் முடிவு தன்னிச்சையானது என அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கே தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட தகுதி, நிபந்தனைகள் உள்ளிட்டவை விதிக்கப்பட்டன. ஜெயலலிதாவே நிரந்தர பொது செயலாளர் என்று அறிவித்து அந்த பதவியை மீண்டும் கொண்டு வந்துள்ளனர்.
அடிப்படை உறுப்பினர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும்
பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட புதிய நிபந்தனைகளை விதித்து விதிகளை திருத்தியுள்ளனர். அடிப்படை உறுப்பினர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும். அந்த விதியை பொதுக்குழு திருத்த முடியாது. அடிப்படை உறுப்பினர்கள் தான், ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு நடைபெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டு வந்தது தவறு. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக உச்சநீதிமன்றம் கூறவில்லை. பொதுக்குழுவில் தீர்மானமே கொண்டு வராமல் இரட்டை தலைமை முறை காலாவதியானதாக எப்படி கூற முடியும்? என ஓபிஎஸ் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.