பாஜகவின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்துங்கள் – தொண்டர்களுக்கு திமுக தலைவர் மடல்!
அ.தி.மு.க. தலைமையினால், கடந்த 10 ஆண்டுகளில் பட்ட பாட்டை நினைவுபடுத்துங்கள் என்று தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மடல்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் பிப்ரவரி 19-ஆம் தெத்து ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 28-ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன. மனுத் தாக்கல் செய்ய பிப்.4-ஆம் தேதி கடைசி நாளாகும்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கூட்டணி, இட பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியல் உள்ளிட்டவைகள் குறித்து அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, தொண்டர்களுக்கு திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான முக ஸ்டாலின் மடல் ஒன்று எழுதியுள்ளார்.
அதில், நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தெருவுக்குத் தெரு, வீட்டுக்கு வீடு சென்று வாக்கு சேகரிப்புப் பணியை விரைவுபடுத்துங்கள்! நாடு போற்றும் வெற்றியை ஈட்டுவோம். உள்ளாட்சியில் வென்று, நல்லாட்சி தொடர்வோம்! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிப்ரவரி 19-ஆம் நாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வது,தோழமைக் கட்சிகளுக்கு இடங்களைப் பகிர்ந்தளிப்பது, அனைவருடனும் ஒருங்கிணைந்து செயல்படுவது என நிர்வாகிகள் கடமை உணர்வுடனும், பொறுப்புடனும் செயலாற்றிட வேண்டும்.
கூட்டணிக் கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு நெருடல் ஏற்படாத வகையில் கழகத்தினரின் அணுகுமுறை அவசியம் அமையவேண்டும். தி.மு.க வேட்பாளர்கள் தேர்வு என்பது, இராணுவ வீரர்களைத் தேர்வு செய்வது போன்ற கட்டுக்கோப்பானதாக இருக்க வேண்டும். குற்றப் பின்னணி உள்ளவர்களை வேட்பாளராகத் தேர்வு செய்திடல் நிச்சயமாகக் கூடாது.
தெருவுக்குத் தெரு, வீட்டுக்கு வீடு சென்று வாக்கு சேகரிப்புப் பணியை விரைவுபடுத்துங்கள். கடும் நிதி நெருக்கடியிலும் அரசு நிறைவேற்றி வரும் சாதனைகளை மக்களிடம் சொல்லி வாக்கு சேகரியுங்கள். அ.தி.மு.க. தலைமையினால், கடந்த 10 ஆண்டுகளில் பட்ட பாட்டை நினைவுபடுத்துங்கள். தமிழ்நாட்டு மக்களின் மனதில் மதவெறியை விதைத்து, கலவரத்தைத் தூண்டிவிட்டு, அரசியல் குளிர்காய அவசரம் காட்டும் பா.ஜ.க.வின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்துங்கள்.
சமூகநீதி, சுயமரியாதை, சாதி வேறுபாடற்ற மதநல்லிணக்கம், ஒருங்கிணைந்த வளர்ச்சி இவற்றை அடிப்படையாகக் கொண்ட ‘திராவிட மாடல்” அரசாக விளங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் திட்டங்களும், செயல்பாடுகளுமே தேர்தல் களத்தில் நமக்கான நற்சான்றுக் கருவிகள். நல்லாட்சியின் விளைச்சலை, உள்ளாட்சியில் முழு வெற்றியாக அறுவடை ஊக்கத்துடன் அயராது பாடுபடுங்கள் என்று தொண்டர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி அமைப்புகள்தான் மக்களாட்சியின் ஆணிவேர்!
நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தெருவுக்குத் தெரு, வீட்டுக்கு வீடு சென்று வாக்கு சேகரிப்புப் பணியை விரைவுபடுத்துங்கள்!
நாடு போற்றும் வெற்றியை ஈட்டுவோம்!https://t.co/A0TMiMb8zX#LetterToBrethren pic.twitter.com/9r2wYG3Prr
— M.K.Stalin (@mkstalin) January 30, 2022