#BREAKING: 30 நாட்களுக்குள் செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் – மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு!

Default Image

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 30 நாட்களுக்குள் செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு.

நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் தேர்தல் வரவு, செலவு கணக்குகள் விவரத்தினை உரிய அலுவரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சாதாரண தேர்தல் கடந்த 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற்றது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 22-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தலில் செலவிடப்பட்ட தொகைக்கான கணக்கினை முறைப்படி உரிய படிவத்தில் பராமரிக்க வேண்டும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டியிருந்தது.

அவ்வாறு பராமரிக்கப்பட்ட கணக்கின் உண்மை நகலினை, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து முப்பது நாட்களுக்குள் மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மாவட்டத் தேர்தல் அலுவலர் / ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சியிடமும், நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தொடர்புடைய நகராட்சி ஆணையரிடமும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தொடர்புடைய பேரூராட்சியின் செயல் அலுவலரிடமும் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து நகர்ப்புற அமைப்புகளில், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் தேர்தல் செலவு கணக்கு விவரத்தினை உரிய அலுவலரிடம் தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் செலவு கணக்குத் தாக்கல் செய்தமைக்கான ஒப்புதலை தொடர்புடைய அலுவலரிடமிருந்து வேட்பாளர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.

தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது தமிழ்நாடு நகராட்சிகள் சட்டம், 1920 பிரிவு 49(2-A) மற்றும் தொடர்புடைய மாநகராட்சிகளின் சட்ட பிரிவின்கீழ் மற்றும் தமிழ்நாடு பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் (தேர்தல்கள்), விதிகள், 2006, பிரிவு 116(13)-ன்படி தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, வருங்காலங்களில் மூன்று ஆண்டுகளுக்கு உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட தகுதியற்றவர்கள் ஆக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்