மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்பவர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலில் விலக்கு.!
மாவட்டம் விட்டு மாவட்டம் பயணம் செய்பவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் இல்லை என்று சுகாதார துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று முதல் இபாஸ் முறை ரத்து, பேருந்து சேவைக்கு அனுமதி, வழிப்பாட்டு தலங்கள் திறக்க அனுமதி உள்ளிட்ட கட்டுபாட்டுகளுடன் கூடிய பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது . அந்த வகையில் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்பவர்களில் கொரோனாவுக்கான அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்யப்படும் என்று சுகாதார துறை தெரிவித்துள்ளது.
மேலும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் நோய் தொற்று இல்லை என்ற சான்று, அதாவது 96 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட கொரோனாவுக்கான பரிசோதனையில் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் இருக்க வேண்டும் என்றும், அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்றும், அவர்கள் வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் அந்த சான்றிதழ் இல்லாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திற்கு வந்து விட்டு அடுத்த 72 மணி நேரத்தில் சொந்த ஊருக்கு திரும்பும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை இல்லை என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.