பரபரப்பான ஒற்றை தலைமை விவகாரம் – ஓபிஎஸ் டெல்லி நோக்கி பயணம்;காரணம் இதுதானா?..!
அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சையால் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு என இரு அணிகளாக பிரிந்து,சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றனர்.அப்போது,ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாக மேடையில் தெரிவித்தார்.
2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்து:
அதன்பின்னர்,அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.இதனைத் தொடர்ந்து,ஒற்றைத் தலைமை வேண்டும் என்று 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அவைத்தலைவருக்கு கடிதம் எழுதிய நிலையில்,அதனை மேடையில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் வாசித்தார்.பின்னர்,அதனை அவைத்தலைவரிடம் வழங்கினார்.
பாதியிலேயே வெளியேறிய ஓபிஎஸ்:
இதனையடுத்து,அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி காலை 9.15-க்கு கூடும் என்று அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார்.இந்த நிலையில்,அதிமுக பொதுக்குழு மேடையிலிருந்து பாதியிலேயே ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறி சென்றனர்.அப்போது,அதிமுக பொதுக்குழுவிலிருந்து வெளியேறிய ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்ட நிலையில்,அவர் வந்த பரப்புரை வாகனத்தின் டயர் பஞ்சர் செய்யப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.இதனிடையே,அதிமுக பொதுக்குழு கூட்டம் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் நிறைவு பெற்றது.
பாஜக தலைவர் சந்திப்பு:
இதனையடுத்து,தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,ஓபிஎஸ்,ஈபிஎஸ்-ஐ தனித்தனியே நேற்று சந்தித்தார்.இந்த சந்திப்பின் போது,தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்மு அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுது கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
டெல்லி நோக்கி ஓபிஎஸ்:
இதனைத் தொடர்ந்தது,ஓபிஎஸ் மற்றும் மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட ஆதரவாளர்கள் டெல்லி செல்வது உறுதியாகியது.ஆனால்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சொல்கிறாரா என்பது உறுதியாகவில்லை என்றும் ஆனால், வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,சென்னையில் இருந்து நேற்று இரவு புறப்பட்டு விமானம் மூலம் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் டெல்லி சென்றுள்ளனர். குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.இதற்கான அழைப்பு பாஜக தலைமையிடம் இருந்து தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில்,தான் டெல்லி சென்றுள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.அவரோடு மனோஜ் பாண்டியன்,ஓபிஎஸ் மகனான எம்பி ரவீந்திரநாத் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.