பரபரப்பு.. ஓபிஎஸ்ஸை வெளியேற சொல்லி பொதுக்குழு அரங்கிற்குள் உறுப்பினர்கள் முழக்கம்!
பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் முன்னிலையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என முழக்கமிட்டதால் பரபரப்பு.
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. தற்காலிக அவைத்தலைவர் தமிழ் உசேன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்தில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். பொதுக்குழு நடக்கும் இடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்களும், மூத்த நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களும் என பலரும் திரண்டுள்ளனர்.
இந்த நிலையில், வானகரத்தில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வந்தடைந்தார். அப்போது, அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என ஓ.பி.எஸ்-க்கு எதிராக தொடர்ந்து எடப்பாடி ஆதவாளர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதன்பின், அதிமுக பொதுக்குழு நடைபெறும் ஸ்ரீவாரு மண்டபத்துக்குள் ஓ.பன்னீர்செல்வம் வரும்போது, எடப்பாடி ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். ஸ்ரீவாரு மண்டபத்துக்குள் வந்த ஓபிஎஸ் வெளியேற சொல்லி பொதுக்குழு உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இ.பி.எஸ் ஆதரவாளர்களின் முழக்கத்தால் அரங்கத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. ஓபிஎஸ் ஒழிக, துரோகி ஓபிஎஸ் என முழக்கமிட்டு வருவதால் அதிமுக பொதுக்குழுவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடண்டர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது ஆயிரம் கைகள் மறைத்தாலும் ‘ஆதவன்’ மறைவதில்லை என எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வளர்மதி பேசியுள்ளார். நீதிமன்றம் ஆணைப்படி பொதுக்குழு நடப்பதால் அமைதி காக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பொதுக்குழு உறுப்பினர்கள் இராணுவ கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்றும் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் எனவும் ஆர்பி உதயகுமார் கூறினார். இதனிடையே, தொண்டர்கள் துரோகி என முழக்கமிட்டதால் பொதுக்குழு மேடையில் இருந்து கீழே இறங்கினார் வைத்திலிங்கம். அதிமுக பொதுக்குழுவில் உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பு உறுப்பினர்கள் வாக்குவாதத்தால் அதிமுக பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், ஓபிஎஸ் மேடையில் அமர்ந்தார் என்றும் கூறப்படுகிறது.