ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி 63 அடியை எட்டியது..!
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் மீட்கும் பணி 73 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசு பல முயற்சிகள் செய்து வருகிறது.
இந்நிலையில் அதிகாரிகள் தற்போது ஆழ்துளை கிணறுக்கு அருகில் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை 07.05 மணிக்கு ரிக் இயந்திரத்தின் மூலம் குழி தோண்டும் பணி தொடங்கியது.
ஆனால் இரவு 12.10 வரை முதல் ரிக் இயந்திரம் மூலம் 35 அடி மட்டுமே தோண்டப்பட்டது. பின்னர் முதல் ரிக் இயந்திரத்தை விட மூன்று மடங்கு அதிக திறன் கொண்ட இரண்டாவது ரிக் இயந்திரம் இராமநாதபுரத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு இரவு 12 மணிக்கு மேல குழி தோண்டும் பணியை தொடங்கியது.
ஆனால் கடினமான பாறைகள் இருந்ததால் பிற்பகல் 1 வரை 45 அடி வரை மட்டுமே தோண்ட முடிந்தது. பின்னர் போர்வெல் இயந்திரம் மூலம் பாறைகளில் 5 துளைகள் போடப்பட்டது. அதில் ஒரு துளை 40 அடியும் , மற்ற நான்கு துளைகள் 15 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டது.
இதை தொடர்ந்து மாலை 5 மணிக்கு மீண்டும் ரிக் இயந்திரம் குழி தோண்டும் பணியை தொடங்கியது.தற்போது ரிக் இயந்திரத்தால் 63 அடி வரை குழி தோண்டப்பட்டுள்ளது. போர்வெல் இயந்திரம் மூலம் பாறைகளில் 5 துளைகள் போட்டதால் 2 மணி நேரத்தில் ரிக் இயந்திரம் 10 அடிக்கு மேல் குழி தோண்டியது.