முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனின் மகன், மகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு!

sengutuvan

சொத்து குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனின் 2 மகன்கள், மகளுக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 1996 முதல் 2001 வரை கால்நடை துறை அமைச்சராக இருந்த செங்குட்டுவன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவரது மகன்கள் பன்னீர்செல்வம், சக்திவேல் மற்றும் மகள் மீனாட்சி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட செங்குட்டுவன், அவரது மருமகன் இறந்துவிட்டதால், மற்றவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வழக்கில் செங்குட்டுவனின் சகோதரர் மகள் வள்ளிக்கும் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம். இதனிடையே, திமுக முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் (80) கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி காலமானார்.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகிலுள்ள வேலக்குறிச்சியைச் சேர்ந்த இவர், மருங்காபுரி ஒன்றிய திமுக செயலாளராக 7 முறை பதவி வகித்தவர். மருங்காபுரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும் இருந்துள்ளார். பின்னர், 1996-ல் மருங்காபுரி தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்று திமுக அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் கால்நடைத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

2013-ல் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அவர் மீண்டும் திமுகவில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார். இந்த நிலையில், திமுக ஆட்சியில் 1996-2001 ஆம் ஆண்டில் கால்நடை துறை அமைச்சராக இருந்த செங்குட்டுவன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட செங்குட்டுவன் காலமானதால், தற்போது அவரது மகன்கள், மகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்