அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அவர்கள் மீது ஏதேனும் தாக்குதல் நடைபெற்றால் அதற்கு இந்த தி.மு.க. அரசுதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்டக் கழக செயலாளருமான சிவி சண்முகம் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறையினரின் பாதுகாப்பை திடீரென்று வாபஸ் பெற்றதை அதிமுக சார்பில் கடுமையாக கண்டிப்பதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும்,எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
“முன்னாள் சட்டத்துறை அமைச்சர் அவர்களும், விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளருமான திரு. சி.வி. சண்முகம் அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 2006-ம் ஆண்டு திண்டிவனம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போது, 2006-ம் ஆண்டு மே மாதம் அரசியல் எதிரிகள் இவரது வீடு புகுந்து அவர் மீது கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டனர். அத்தாக்குதலில் திரு. சண்முகம் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மேலும், அத்தாக்குதலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர் திரு. முருகானந்தம் கொலை செய்யப்பட்டார். உடமைகளுக்கு சேதம் ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், ரோஷணை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என்றும், தவறு செய்தவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் திரு. சண்முகம் அவர்கள் இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதன்படி 2012-ம் ஆண்டு முதல் சி.பி.ஐ. இவ்வழக்கை விசாரித்து வருகிறது.
அச்சமயத்தில் அவரது பாதுகாப்பை ஆய்வு செய்த காவல்துறை, அவர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தக்கூடிய அச்சுறுத்தல் உள்ளதாகவும், அவர் தங்கியுள்ள இடத்தில் தாக்குதல் நடத்தப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன என்றும், எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருக்கும், அவரது வீட்டிற்கும் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்க முடிவு செய்து அவர் வெளியே சென்றால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும், அவரது வீட்டிற்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டு வந்தது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னும், கடந்த 6 மாதங்களாக அவருக்கும், அவரது வீட்டிற்கும் ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு தொடர்ந்து
வழங்கப்பட்டு வந்தது. தற்போது, திரு. சி.வி. சண்முகம் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு திடீரென்று வாபஸ் பெறப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக-வினரின் அராஜகத்தையும், அவர்களது தேர்தல் தில்லு முல்லுகளையும் துணிவுடன் எதிர்த்து நின்று, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட கழக வேட்பாளர்களுக்கு முழு பாதுகாவலனாக விளங்கிய முன்னாள் அமைச்சர் திரு. சி.வி. சண்முகம் அவர்களுக்கு 2006-ம் ஆண்டு, மாண்புமிகு அம்மா அவர்கள் ஆட்சி காலம் முதல் வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை இந்த திமுக அரசின் காவல் துறை திடீரென்று வாபஸ் பெற்றுள்ளதை பார்க்கும்போது ஏதோ உள்நோக்கத்துடன் இது நிகழ்ந்துள்ளதாக சந்தேகம் எழுகிறது. மேலும், கழகத் தொண்டர் திரு. முருகானந்தம் கொலை வழக்கு வரும் நவம்பர் மாதம் 19-ந் தேதி முதல் நடைபெற உள்ள சூழ்நிலையில் இந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன்தான் நடந்துள்ளது என்பதை உறுதிபடுத்தும் வண்ணம் உள்ளது.
முன்னாள் அமைச்சர் திரு. சி.வி. சண்முகம் அவர்களுக்கு அளித்து வந்த போலீஸ் பாதுகாப்பை இந்த அரசு திடீரென்று வாபஸ் பெற்றதை கழகத்தின் சார்பில் நான் கடுமையாக கண்டிக்கிறேன். அவர் மீது ஏதேனும் தாக்குதல் நடைபெற்றால் அதற்கு இந்த தி.மு.க. அரசுதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…