செந்தில் பாலாஜி வழக்கில் தினமும் ஆதாரங்கள் அழிக்கப்படுகிறது.! அமலாக்கத்துறை குற்றசாட்டு.!
செந்தில் பாலாஜி தொடர்பான அமலாக்கத்துறை மேல்முறையீட்டு வழக்கை 24ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
செந்தில் பாலாஜி மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொர்ணர்வு மனுவுக்கு எதிராகவும், செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றியதற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற தீர்ப்பை பார்த்தபின் முடிவெடுப்பதாக ஏற்கனவே உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. அந்த வகையில், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, அமலாக்கத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது அமலாக்கத்துறை சார்பில் பரபரப்பான வாதம் முன்வைக்கப்பட்டது. அமலாக்கத்துறை வாதத்தில், செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் கடுமையான ஆதாரங்கள் தினமும் அழிக்கப்பட்டு வருவதாக குற்றசாட்டியுள்ளது. செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருப்பதால் எங்களால் கடமையை செய்ய முடியவில்லை. செந்தில் பாலாஜி தொடர்ந்து மருத்துவமனையிலேயே இருக்கிறார்.
மற்றொரு பக்கம் நீதிமன்றங்களில் இந்த விவகாரம் நிலுவையிலேயே இருந்து வருகிறது. இதனால் எங்களால் எங்களது கடமையை செய்ய முடியவில்லை. செல்வாக்கு மிக்க நபரான செந்தில் பாலாஜியை உடனே விசாரிக்காவிடில் விசாரணை நீர்த்துப்போகும் என்றுள்ளனர்.
விசாரணையை காலம் தாழ்த்தும் ஒவ்வொரு நொடியும் வழக்கை நீர்த்துப்போக செய்யும் என வாதம் வைத்தது அமலாக்கத்துறை. மேலும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அளித்த மாறுபட்ட தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது. எனவே, செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது உச்ச நீதிமன்றமே முடிவு எடுக்க வேண்டும் எனவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.
இதன்பின், செந்தில் பாலாஜி வழக்கில் உடனடியாக உத்தரவு பிறப்பிக்க மறுப்பு தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம். இருப்பினும், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கக்கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிமன்ற ஜாமீன் வழங்காத நிலையில், செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் தான் இருப்பார் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்து, அமலாக்கத்துறை மேல்முறையீட்டு வழக்கு வரும் ஜூலை 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், செந்தில் பாலாஜி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நிலையில், மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வை விரைவாக அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. அதுவும், ஒரு வாரத்திற்குள் அமர்வு அமைக்க வேண்டும் என்று வழக்கை விரைந்து மெரிட் அடிப்படையில் விசாரித்து முடிக்க வேண்டுமா எனவும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.