எல்லாருக்கும் எல்லாம், நமது பயணம் தொடரும்..! பட்ஜெட் குறித்து முதலமைச்சர் கருத்து!
தமிழக பட்ஜெட் திராவிட மாடல் கருத்தியலை முழுமையாக உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கை என முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு.
எல்லாருக்கும் எல்லாம் என்ற திசை நோக்கிய நமது பயணம் தொடரும், வெல்லும் என தமிழக அரசின் பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், திட்டங்களை உரிய காலத்தில் முடித்து மக்களுக்கு வழங்க அமைச்சர்கள், அதிகாரிகள் அயராது பாடுபட வேண்டும். திராவிட மாடல் என்ற கருத்தியலுக்கு முழுமையான எடுத்துக்காட்டாக நிதிநிலை அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் உதவி செய்யப்போகும் பல்வேறு நலத்திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சி, வேளாண் உற்பத்தி பெருகியுள்ளது. மகளிர் வாழ்வில் மாபெரும் புரட்சியை மகளிர் உரிமைத்தொகை திட்டம் ஏற்படுத்தும். மின்மினி பூச்சி போன்றது நிதிநிலை அறிக்கை என்று கூறிய எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்தார். பட்ஜெட்டின் உள்ளடக்கங்களை அறியும் பக்குவம் எதிர்க்கட்சி தலைவருக்கு இல்லை.
அதிமுக ஆட்சியில் இருந்த காலத்தை தமிழ்நாட்டுக்கு வழங்கிய பழனிசாமியால் உதயசூரியன் ஒளியை பார்க்க முடியாமல் தவிர்ப்பதையே அவரது பேட்டி உணர்த்துகிறது. அதிமுக ஆட்சியில் இருந்த கால நிதிநிலையை சீர்செய்தும் முன்னேற்றியும் முற்போக்கான திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதிநிலை சீராக இருந்திருக்குமானால் இன்னும் பல திட்டங்களை தீட்டியிருக்க முடியும். தமிழ்நாட்டை நோக்கி ரூ.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளோம் என கூறியுள்ளார்.
திமுக ஆட்சி வரும்போது ரூ.62 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை தற்போது ரூ.30 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளோம். தமிழ்நாட்டை தலை நிமிர வைக்கும் நிதிநிலை அறிக்கை எனவும் பாராட்டு தெரிவித்தார். தமிழ்நாட்டை தலை நிமிர வைக்கும் நிதிநிலையை உருவாக்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு நன்றி எனவும் கூறியுள்ளார். மேலும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சியை மாத்தி வைத்து திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.