அதிமுக கொடியை எல்லாரும் பயன்படுத்தலாம்…! – முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி
அதிமுகவின் கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இந்தப் பொறுப்பில் இருந்தால் மட்டும்தான் நீங்கள் கட்சி கொடியை பயன்படுத்தலாம் என எங்காவது இருக்குதா?
கடந்த ஜனவரி 27-ஆம் தேதி 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பின் சிறையில் இருந்து சசிகலா அவர்கள் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அதற்கு முன் 20ஆம் தேதி பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக 11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலாவை மருத்துவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து சசிகலாவின் சொந்தமான காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கூறுகையில், 2017 ஆம் ஆண்டிலேயே சசிகலா உள்ளிட்டோர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் படங்களை பயன்படுத்தவும் சசிகலாவிற்கு தார்மிக உரிமை இல்லை. கட்சியில் எந்த பொறுப்பும் இல்லாத ஒருவர் அதிமுக கொடியை பயன்படுத்துவது ஏற்க முடியாது. மேலும் அவருக்கு இந்த கொடியை பயன்படுத்த எந்த உரிமையும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதுபோன்று அதிமுகவை சேர்ந்த மற்றும் சில அமைச்சர்கள் சசிகலா அவர்கள் கொடியை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அதிமுகவின் கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இந்தப் பொறுப்பில் இருந்தால் மட்டும்தான் நீங்கள் கட்சி கொடியை பயன்படுத்தலாம் என எங்காவது இருக்குதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவரிடம் செய்தியாளர்கள் இவர்கள் மூவரும் இணைவதற்கு எது தடையாக உள்ளது என கேள்வி கேட்டதற்கு பதிலளித்த அவர், இவர்கள் மூவரும் இணைவதற்கு ஈகோவே தடையாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.