பள்ளி மாணவர்களுக்கு மாலையில் ஸ்நாக்ஸ்.. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 83 புதிய அறிவிப்புகள்!
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 83 புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாக மேயர் பிரியா அறிவிப்பு.
சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார் மேயர் பிரியா.
அதில், சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதீனி எனப்படும் “ஸ்நாக்ஸ்” வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் நொறுக்கு தீனி வழங்க மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று போட்டி தேர்வில் வென்று கல்லூரி சேரும் மாணவர்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாணவர்களுக்கு முதலாமாண்டு கல்வி கட்டணத்தை சென்னை மாநகராட்சியே செலுத்தும் என அறிவித்தார். ஜேஇஇ, க்ளேட், நீட் போன்ற போட்டி தேர்வுகளில் வென்று உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்தப்படும். சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 139 பள்ளிகளுக்கு ரூ.15 கோடியில் கட்டமைய்ப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.
10 மேல்நிலை பள்ளிகளில் ரூ.10 கோடி மதிப்பில் ஆய்வகம் மேம்படுத்தப்படும். சென்னையில் அனைத்து பள்ளிகளிலும் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். பள்ளி மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் நடவடிக்கையை அதிகரிக்க பள்ளிகளில் மாதிரி ஐநா சபை குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், மாநகராட்சி உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதி ரூ.35 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தப்படுகிறது. சென்னை மாநகர்ச்சி பட்ஜெட்டில் 83 புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.