10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம்!
அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் காரணமாக பள்ளி திறப்பு இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த12-ஆம் தேதியும், ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 14-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதன்பின், வரும் கல்வியாண்டில் பாடங்களை விரைவாக முடிக்க சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் வரும் கல்வி ஆண்டில், மாணவர்களுக்கு பாடச் சுமைகள் இல்லாதவாறும், ஆசிரியர்களுக்கு பணிச்சுமை ஏற்படாத வகையிலும், சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் மீறினால் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.