ஆள் பிடித்தாலும், வேல் பிடித்தாலும், ஆட்சியை பிடிக்க முடியாது – ஓபிஎஸ் விமர்சனம்

தேர்தலுக்காக வேல் பிடித்தாலும் சரி, ஆளை பிடித்தாலும் சரி ஆட்சியை மட்டும் பிடிக்க முடியாது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட குன்னத்தூர் பகுதியில் சுமார் 12 ஏக்கரில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா கோயிலை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் திறப்பு விழாவில் பங்கேற்றனர். இந்த திறப்பு விழாவில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.
பின்னர் கோ பூஜையில் பங்கேற்று மூத்த கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர் 120 பசுக்களை தானம் செய்தார். நலிவுற்ற 234 கட்சி நிர்வாகிகளுக்கு பொற்கிழிகளை வழங்கியதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொது கூட்டத்தில் முதல்வர் தமிழக அரசின் சாதனை திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.
இதையடுத்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அந்த தீயசக்திகள் வருகின்ற தேர்தலில் வெற்றிக்கு வழிதேட வட மாநிலத்தில் இருந்து ஆள் பிடித்து வந்தார்கள். தற்போது வேறு வழியில்லாமல் கையில் வேலும் பிடித்து உள்ளார்கள். அவர்கள் ஆள் பிடித்தாலும் சரி, வேல் பிடித்தாலும் சரி தமிழ்நாட்டில் ஆட்சியை மட்டும் பிடிக்க முடியாது என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன் என்று பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.