‘சீமான் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்’ – டிஐஜி வருண்குமார்!
சீமான் இனிமேல் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று திருச்சி டிஐஜி வருண்குமார் கூறியுள்ளார்.
சென்னை: திருச்சி எஸ்பியாக இருந்து டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற வருண்குமாரையும், அவரது மனைவியையும் நாம் தமிழர் கட்சியினர் சிலர் வலைதளங்களில் மோசமாக விமர்சித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சீமான் உள்ளிட்டோர் மீது தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், இன்று நடந்த வழக்கு விசாரணையில் நேரில் ஆஜரான வருண்குமார், நாதகவினருக்கு எதிராக வாக்குமூலம் அளித்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய வருண்குமார்,”இவரை எப்படி சொல்ல வேண்டும் என்றால், மைக் முன்னாடி புலி.. மற்ற இடத்தில் எலி. இந்த பிரச்சனைக்கு பின், சீமான் தனியாக சந்தித்து மன்னிப்பு கேட்பதாக தொழிலதிபர் ஒருவர் மூலமாக தூது விட்டார், நான் ஒப்புக்கொள்ளவில்லை. அதில் எனக்கு உடன்பாடு இல்லை.
பொது வெளியில் பெரிய குற்றசாட்டை வைத்திருக்கிறார். ஜாதி ரீதியாக செயல்படுகிறார், பிறப்பு வேறுப்பு இப்படியெல்லாம் பேசிருக்கிறார். என்னுடைய வீட்டில் இருக்கும் பெண்களை போட்டோ மார்பிங் செஞ்சாருக்காங்க அவரது கட்சியனர். ஆனால், இது தனது கட்சியனர் இல்லை என கூறியிருக்கிறார்.
இப்பவும் இன்டர்நெட்டில் அந்த போட்டோஸ் எல்லாம் இருக்கிறது. அதுக்காகத்தான் எக்ஸ் தளத்தில் இருந்து வெளியே வந்தேன். என் குழந்தைகளுக்கு மிரட்டல் விடுத்திருக்காங்க அவரது கட்சினர். பொதுவெளியில் மன்னிப்பு கேட்க தயாராக இருந்தால் நீதிமன்றத்தில் அதை தெரிவிக்கட்டும். சீமானின் பேச்சுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி தருவேன், என்னை மிரட்டி பார்க்க முடியாது. அதற்கான ஆள் நான் இல்லை” என்று பரபரப்பாக பேசியிருக்கிறார்.
முன்னதாக, நாம் தமிழர் கட்சியினர் உடனான இந்து தொடர் உரசல்கள், இணையதள கருத்து மோதல்கள் என தொடர்ந்ததை அடுத்து, அண்மையில் தற்போது டிஐஜியாக பதவி உயர்வு பெற்றவருண்குமார் சமூக வலைதளத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். வருண்குமாரின் குடும்பத்தை சிலர் அவதூறாக பேசியதும், அவருடைய மனைவி புவந்திதா பாண்டேவையும் அவதூறாக பேசியதையும் தொடர்ந்து, அந்த வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.