திமுகவின் அடித்தளம் இந்த ஈரோடு… கடைசிநாள் தேர்தல் பரப்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.!
ஈரோடு பெரியார் பிறந்த மண், கலைஞர் வளர்ந்தமண், திமுகவுக்கு அடித்தளம் அமைத்த மண். – இடைதேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
வரும் திங்கள் கிழமை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்றுடன் அதற்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் ஓய்கிறது. இன்று மாலை 5 மணிக்கு அனைத்து வகையான பிரச்சாரமும் முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடைசி நாள் : இன்று தான் கடைசி நாள் பிரச்சரம் என்பதால் பிரதான கட்சி தலைவர்கள் தங்கள் ஆதரவு வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் காங்கிரஸ் சார்பில் திமுக கூட்டணியில் இருந்து களமிறங்கும் இ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளார் என்று ஏற்கனவே அறிவிக்கபட்டு இருந்தது.
முதல்வர் பிரச்சாரம் : அதே போல தற்போது திறந்தவெளி வாகனத்தில் இவிகேஎஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக அவருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
திமுகவுக்கு அடித்தளம் : அப்போது அவர் பேசுகையில், ஈரோடு பெரியார் பிறந்த மண், கலைஞர் வளர்ந்தமண், திமுகவுக்கு அடித்தளம் அமைத்த மண் என பேசினார். மேலும், பழைய நினைவுகளை அவர் கூறினார்.
கலைஞர் மீது தாக்குதல் : அவர் கூறுகையில், ஒரு நேரத்தில் கலைஞர் மேடை நாடகம் போட தயார் செய்த போது ஒரு பிரிவினர் அந்த நாடகத்தை போட கூடாது என கலைஞர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். அப்போது புதுச்சேரியில் இருந்த பெரியார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து கலைஞரை காப்பாற்றி, ஈரோட்டுக்கு அழைத்து சென்றார்.
கலைஞரின் மைந்தன் : அங்கு, குடியரசு பத்திரிகையில் துணை ஆசிரியராக கலைஞருக்கு பொறுப்பு கொடுத்தார் தந்தை பெரியார். எனவும், அவரது அண்ணன் மகன் தான் இ.வி.கே.சம்பத் சிறந்த பேச்சாளர் என்று அறிஞர் அண்ணாவால் பெயர் பெற்றவர். சம்பத் மைந்தனுக்கு , கலைஞர் மைந்தன் ஒட்டு கேட்டு வந்துள்ளேன்.’ என கூறி வாக்கு சேகரித்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.