ஈரோடு கிழக்கு – வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரம்!
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரம்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த அனல்பறக்கும் பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்த நிலையில், நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
தேர்தல் பரப்புரை ஓய்வு:
தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் முக ஸ்டாலின், அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமியும், நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து சீமானும் கடைசி நாளில் பிரச்சாரம் மேற்கொண்டனர். தேமுதிக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சி தலைவர்களும் கடைசி நாளில் வீதி வீதியாக வாக்கு சேகரித்தனர்.
இடைத்தேர்தலில் 4 முனை போட்டி:
பிரச்சாரம் முடிந்ததை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து வெளியூரை சேர்ந்தவர்கள் வெளியேறினர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. அதன்படி, திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வாக்கு பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரம்:
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்ததை அடுத்து வாக்கு பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பிரசாரம் ஓய்ந்த நிலையில், வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில், 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாளை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.