மீண்டும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! முக்கிய தேதிகளை அறிவித்த தேர்தல் ஆணையம்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்று, வாக்கு எண்ணிக்கையானது பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஈரோடு : இந்திய தேர்தல் ஆணைய தலைமை அதிகாரி ராஜீவ் குமார் தற்போது 70 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட டெல்லி மாநில தேர்தல் தேதி விவரங்களையும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதிகளையும் அறிவித்துள்ளார்.
அதன்படி, டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. அதே தேதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முக்கிய தேர்தல் தேதி விவரங்கள் இதோ…
வேட்புமனு தாக்கல் தொடங்கும் தேதி – ஜனவரி 10, 2025.
வேட்புமனு தாக்கல் இறுதி நாள் – ஜனவரி 17, 2025.
வேட்புமனு பரிசீலனை – ஜனவரி 18, 2025.
வேட்புமனு வாபஸ் பெற கடைசி தேதி – ஜனவரி 20, 2025.
வாக்குப்பதிவு நடைபெறும் நாள் – பிப்ரவரி 5, 2025 (புதன்).
வாக்கு எண்ணிக்கை – பிப்ரவரி 8, 2025 (சனி).
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று முதல் அந்த தொகுதியில் மட்டும் வழக்கமான தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக களமிறங்கிய திருமகன் ஈவேரா எம்எல்ஏவாக தேர்வானார். ஆனால் அவர் கடந்த 2023 ஜனவரியில் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவரும் திருமகன் ஈவேராவின் தந்தையுமான இவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவரும், கடந்த வருடம் (2024) டிசம்பர் 14-ல் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனை அடுத்து தான் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் மில்கிபூர் தொகுதியிலும் மேற்கண்டபடி பிப்ரவரி 5இல் இடைத்தேர்தல் நடைபெற்று பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.