ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு.!
திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் மற்றும் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேலும், நாம் தமிழர் கட்சி சார்பில், மா.கி.சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், எதிர்க்கட்சிகளான அதிமுக, தேமுதிக-வை தொடர்ந்து தேசிய ஜனாயக கூட்டணி பாஜக-வும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்தது.
இந்நிலையில், திமுக-வின் சந்திரகுமாரும், நாதக-வின் சீதாலட்சுமியும் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். கடந்த 10ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், இதுவரை 9 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளது. வரும் 20ஆம் தேதிக்குள் வேட்புமனுவை வாபஸ் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.