ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக சார்பில் வி. சி.சந்திரகுமார் போட்டி!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க.கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் வி. சி. சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.
இதனையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக திமுக போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தீவிர ஆலோசனைக்குப் பின் அத்தொகுதியை திமுகவுக்கு வழங்கியதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டு அறிவித்திருந்தார்.
இந்த சூழலில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக வேட்பாளராக யார் போட்டியிடவுள்ளார் என்பதற்கான அறிவிப்பும் தற்போது வெளிவந்திருக்கிறது. அதன்படி, தி.மு.க.கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் வி. சி. சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் ” நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கலந்து பேசியதில், திராவிட முன்னேற்றக் கழகம், இந்த தொகுதியில் போட்டியிடுவதாக முடிவு எடுக்கப்பட்டது. வருகிற 05-02-2025 அன்று நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.கழக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் கழக வேட்பாளராக, திரு. வி.சி.சந்திரகுமார் (தி.மு.க.கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்) அவர்கள் போட்டியிடுவார்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில், தி.மு.க வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் (தி.மு.க.கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்) போட்டியிடுவார் – @mkstalin @DMKITwing @arivalayam #ERODEEASTBYPOLL pic.twitter.com/82ps7vGjO7
— Ramachandran (@ramachandran_AA) January 11, 2025