ஈரோடு இடைத்தேர்தல் : திமுகவுக்கு சிபிம் ‘முதல்’ ஆதரவு!
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் யார் நின்றாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கும் என அக்கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அடுத்து தேர்தல் விதிகள் இன்று முதல் ஈரோடு கிழக்கு தொகுதியில் அமலானது. தேர்தல் வேலைகளிலும் பிரதான அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களாக திருமகன் ஈவேரா, இவிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோர் வென்றுள்ளதால் மீண்டும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுமா அல்லது திமுக நேரடியாக களமிறங்குமா என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த திமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் , கட்சி தலைமை ஆலோசனை முடிந்த பிறகு முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வேட்பாளார்களே அறிவிக்கப்படாத சூழலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் இருந்து யார் நின்றாலும், சிபிஎம் முழு ஆதரவு கொடுக்கும். ” என்று தெரிவித்தார்.
மேலும், ” மக்கள் நலன் சார்ந்து சமரசமற்ற போராட்டத்தை சிபிஎம் தொடர்ந்து நடத்தி வருகிறோம். இனியும் நடத்துவோம்.” என்றும் சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.