ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; 96 பேர் மனுதாக்கல், இன்று பரிசீலனை.!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், 96 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக மறைந்ததையடுத்து, காலியாக உள்ள அந்த தொகுதிக்கு வரும் பிப்-27 இல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கிய நிலையில், நேற்று மாலை 3 மணியுடன் நிறைவு பெற்றது.
வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு நேற்று கடைசி நாள் என்பதால், இபிஎஸ் தரப்பு அதிமுக வேட்பாளர் தென்னரசு மற்றும் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். குக்கர் சின்னம் கிடைக்காததால் இடைத்தேர்தலில் இருந்து விலகுவதாக அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்றுடன் நிறைவு பெற்ற வேட்புமனு தாக்கலில், 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை வாபஸ் பெற பிப்-10 ஆம் தேதி கடைசி நாள் எனவும், அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேட்பு மனுக்கள் மீதான ரிசீலனை இன்று நடைபெறுகிறது.