“ஈரோடு இடைத்தேர்தல் நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்கள்” – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு, திமுக தொண்டர்களுக்கு அக்கட்சி தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் மூன்றே நாட்களே உள்ள நிலையில், ஈரோடு இடைத்தேர்தல் நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இடைத்தேர்தல் குறித்து தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்கள். மக்களை சந்திக்கும் வலிமையற்ற அதிமுக, பாஜக வழக்கம்போல் அவதூறுகளை கூறுகின்றன. தமிழகத்திற்கு பாடுபடும் திமுக அரசையும், வஞ்சிக்கும் மத்திய அரசையும் மக்கள் அறிந்துள்ளனர்.
ஈரோட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை மேற்கோள் காட்டி அவர் எழுதியுள்ள கடிதத்தில், நானே நேரில் வந்து வாக்கு சேகரித்ததாக எண்ணி திமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், திமுகவை களத்தில் சந்திக்கத் துணிவில்லாத அதிமுக, பிஜேபி அவதூறுகளைப் பரப்பி வருவதாகவும் கடுமையாக சாடியுள்ளார்.
தொண்டர்களின் உழைப்பினாலும், மக்கள் மீது உள்ள நம்பிக்கையாலும் திமுகவின் மாபெரும் வெற்றியை எதிர்நோக்குகிறேன். 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குக் கட்டியம் கூறும் வகையில், ‘வெல்வோம் 200 படைப்போம்’ வரலாறு. நான் நேரில் வந்து வாக்கு சேகரித்ததாகக் கருதி, திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை வெற்றி
பெறச் செய்ய வேண்டும்.
மனதில் பெரும் சுமையுடன் எதிர்கொள்ள வேண்டிய களமாக ஈரோடு இடைத்தேர்தல் அமைந்துவிட்டது. நானே நேரில் வந்து வாக்கு சேகரித்ததாக கருதி திமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் அரசு மீது உள்ள நம்பிக்கை, ஆதரவை சிதைக்க நாளொரு அவதூறு, பொழுதொரு பொய் பரப்பப்படுகிறது” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.