ஈரோடு இடைத்தேர்தல் – மோடி, அண்ணாமலை படத்துடன் அதிமுக பேனர்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தேர்தல் பணிமனையில் பிரதமர் மோடி, அண்ணாமலை படத்துடன் பேனர்.
ஈரோடு இடைத்தேர்தல்:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவை அடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். இடைத்தேர்தலை முன்னிட்டு பிரதான கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இடைத்தேர்தலுக்கானன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து, வேட்புமனுக்களை மீதான பரிசீலனையும் நிறைவு பெற்றது. தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் வாக்குசேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜக நிலைபாடு:
இதனிடையே, இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அறிவித்தன. ஆனால், அதிமுகவில் எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. போட்டியா அல்லது யருக்கு ஆதரவு என பாஜக இடைத்தேர்தல் குறித்த தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என தெரிவித்திருந்தது. ஒருபக்கம் இரட்டை தலைமை சர்ச்சை, மறுபக்கம் பாஜகவின் தாமதம் என ஒரு இக்கட்டான நிலையில் இபிஎஸ் தரப்பினர் தள்ளப்பட்டனர்.
வேட்பாளரை அறிவித்த இபிஎஸ்:
இதனைத்தொடர்ந்து, தமிழக பாஜகவின் நிலைப்பாட்டை எதிர்பார்க்காமல், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசு என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஈரோட்டில் அதிமுக தேர்தல் பணிமனையை திறந்த உடன் வேட்பாளரை அறிவித்தது பழனிசாமி அணி. பாஜக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் முன்னரே வேட்பாளரை அறிவித்து பழனிசாமி அதிரடி காட்டினார்.
பாஜகவை கழற்றிவிட்டாரா இபிஎஸ்?:
பாஜக நிலைப்பாட்டை எதிர்பார்க்காமல் அதிமுக வேட்பாளரை அறிவித்ததால், அதிமுகவில் இருந்து பாஜகவை கழற்றிவிட்டாரா? எடப்பாடி பழனிசாமி என கேள்வி எழுந்தது. அதுமட்டுமில்லாமல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இபிஎஸ் அணி சார்பில் திறக்கப்பட்ட்ட பணிமனையில் பிரதமர் மோடி, அமித்ஷா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் படம் மற்றும் கொடியும் இடம்பெறவில்லை. பாஜகவின் நிலைப்பாடே எங்கள் நிலைப்பாடு என அறிவித்த ஜான் பாண்டியன், ஏ.சி. சண்முகம் ஆகியோரின் படங்களும் இடம்பெறவில்லை.
அதிமுக பேனரில் ஜிகே வாசன், ஜெகன்மூர்த்தி ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்தது. பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி என்பதற்கு பதிலாக தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என பேனர் வைக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த அதிமுக, தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என பெயர் சூட்டியதால் பாஜக தலைவர்கள் அதிர்ச்சியில் இருந்தனர்.
இபிஎஸ்-க்கு ஆதரவு:
இந்த சமயத்தில் இடைத்தேர்தலில் அதிமுகவில் இபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவு என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். ஓபிஎஸ் தனது வேட்பாளரை திரும்ப பெற வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். அண்ணாமலையின் அறிவிப்பால், பாஜக அதிமுக கூட்டணியில் தொடர்கிறது என தெரிய வந்தது. மறுபக்கம், ஓபிஎஸ்-ம் தனது வேட்பாளர்களை வாபஸ் பெற்றார்.
அதிமுக பேனரின் மோடி படம்:
இந்த நிலையில், ஈரோட்டில் அதிமுக தேர்தல் பணிமனை பேனர் நான்காவது முறையாக மாற்றப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தேர்தல் பணிமனையில் பிரதமர் மோடி, அண்ணாமலை படத்துடன் பேனர் வைத்துள்ளது அதிமுக. அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் தென்னரசு என பேனரில் இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே, 3 முறை மாற்றி அமைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த பேனர்களில் மோடி, அண்ணாமலை படங்கள் இடம்பெறவில்லை. பேனர்களில் கூட்டணி பெயரை 3 முறை குறிப்பிட்ட அதிமுக, இந்த முறையை கூட்டணி பெயரை குறிப்பிடவில்லை. தற்போது, பிரதமர் மோடி, அண்ணாமலை படங்கள் இடம் பெற்றிருந்தாலும் கூட்டணி பெயரை பேனரில் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.