இபிஎஸ் டெண்டர் முறைகேடு வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரனை!
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்து, சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உரிய விசாரணை நடத்தக்கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 2018ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்தலாம் என அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து, மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் இபிஎஸ்க்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதாவது, லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த அறிக்கையை முறையாக ஆய்வு செய்து, அதனடிப்படையில் டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டது. இதன்பின், டெண்டர் முறைகேடு வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணை நடைபெற்றது. அந்த சமயத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையை, ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஏற்காததால், மீண்டும் விசாரணை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கை திரும்ப பெற அனுமதிக்குமாறு ஆர்.எஸ்.பாரதி தரப்பில் கோரப்பட்டது. லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக தனது வழக்கை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டுமென ஆர்.எஸ்.பாரதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே வேளையில், ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் இபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. எனவே, இந்த இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணை முடித்து தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் புதிய விசாரணை தேவையில்லை என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளித்தார். சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய ஆர்.எஸ்.பாரதியின் கோரிக்கையை நிராகரித்து, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இபிஎஸ் மீதான வழக்கில் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெண்டர் முறைகேடு புகார் குறித்து உச்சநீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. டெண்டர் முறைகேடு புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை மனு தாக்கல் செய்தது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. அதாவது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது. அதிமுக ஆட்சி காலத்தின்போது நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை உறவினர்களுக்கு வழங்கியதாக எடப்பாடி பழனிசாமி மீது குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.