மீண்டும் பாஜக உடன் கூட்டணியா? – ஷாக் கொடுத்த இபிஎஸ்.!
அரசியல் சூழலை பொறுத்துதான் கூட்டணி அமைக்கப்படும். தேர்தல் நெருங்கும் போதுதான் அது முடிவு செய்யப்படும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வருகின்ற 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி அமைக்குமா என நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த இபிஎஸ், “ஒன்றை நல்லா புரிஞ்சுக்கணும். அரசியல் சூழலை பொறுத்துதான் கூட்டணி அமைக்கப்படும். தேர்தல் நெருங்கும் போதுதான் அது முடிவு செய்யப்படும்” என்றார்.
இது பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது என்பதை மறைமுகமாக சொல்வதாக உள்ளது. எந்த சந்தர்ப்பத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என சொல்லி வந்த இபிஎஸ், இப்போது இவ்வாறு கூறியுள்ளார்.
தற்பொழுது, விஜய்யால் அரசியல் களம் மாறியுள்ள நிலையில், திமுகவுக்கு எதிராக பலமான கூட்டணி அமைப்பேன் என்பதையே இபிஎஸ் அழுத்தமாக சொல்லி இருக்கிறார். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்காமல் தனித்தனியே போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
பேசுவதற்கு தயாரா?
கருணாநிதி குடும்பத்தில் மட்டும் பிறக்கவில்லை என்றால் ஸ்டாலின் கவுன்சிலர் கூட ஆக முடியாது. நான் முதல்வராக இருந்தபோது நிறைவேற்றிய திட்டங்களை புள்ளி விவரத்துடன் துண்டுச்சீட்டு இல்லாமல் பேசுகிறேன். ஸ்டாலினும் கடந்த 3 ஆண்டு ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களைப் பற்றி பேசத் தயாரா?
கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள்
தமிழகத்தில் திராணியற்ற அரசாங்கம் நடக்கிறது. காவிரி குண்டாறு திட்டம் உள்ளிட்டவை கிடப்பில் போடப்பட்டுள்ளன. சேலத்தில் உள்ள கால்நடை பூங்காவை இதுவரை திமுக அரசு திறக்கவில்லை.
உதயநிதிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
முதல்வர் தனது மகன் உதயநிதியை பற்றியே அதிகம் கவலை கொள்வதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். உதயநிதி அமைச்சர் பணியில் சிறப்பாக செயல்பட்டு 100 மதிப்பெண் பெற்றுள்ளதாக முதல்வர் பெருமைப்படுவதாக குறிப்பிட்ட அவர், மற்ற அமைச்சர்கள் அனைவரும் பெயில் ஆகிவிட்டார்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சில நாள்கள் முன்பு பேசிய முதல்வர், உதயநிதி, அமைச்சர் பணியில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் பேச்சு கேலிக்கூத்தானது
வேண்டுமேன்று திட்டமிட்டு என்னைப் பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது. தம் மீது வஞ்சகம் தீர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசிருக்கிறார்.
திட்டங்களை எதிர்த்தது ஏன்?
மக்கள் பணம் வீணாகிறது என்ற அடிப்படையில் கலைஞர் பெயரிலான திட்டங்களை எதிர்த்தேன். துணை முதலமைச்சர் உதயநிதிக்கு 100 மார்க் என்றால் மற்ற அமைச்சர்கள் வேலை செய்யவில்லையா? சென்னை அருகே முட்டுக்காட்டில் கலைஞர் பெயரில் பன்னாட்டு அரங்கம் திறக்க வேண்டியதன் அவசியம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
முதல்வர் பதவிக்கு உழைத்து வந்தவன் நான்:
முதல்வர் பதவிக்கு தான் வந்தது குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “எனக்கு திறமை இல்லை என ஸ்டாலின் கூறுகிறார். கருணாநிதியின் மகன் என்ற அடையாளத்தை வைத்தே திமுக தலைவராகவும், முதல்வராகவும் உங்களால் ஆக முடிந்தது. ஆனால், சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, கிளைச் செயலாளராக தொடங்கி, படிப்படியாக மேலே வந்து முதல்வர் ஆனவன் நான். இதுதான் திறமை” என்றார்.