“அதிமுக – பாஜக கூட்டணி பற்றி பேசவேயில்லை!” இபிஎஸ் திட்டவட்டம்!
டெல்லியில் அமித்ஷா உடனான சந்திப்பில் கூட்டணி பற்றி பேசவில்லை. மக்கள் பிரச்சனை குறித்து பேசுவதற்காக தான் சென்றோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

டெல்லி : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூத்த அதிமுக தலைவர்கள் நேற்று டெல்லியில் மத்திய அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளனர்.
முதலில் டெல்லியில் கட்டப்பட்ட அதிமுக அலுவலகத்தை பார்வையிட செல்வதாக கூறிவிட்டு சென்ற எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷாவை சந்தித்தது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது. இந்த சந்திப்பை அடுத்து அமித்ஷா தனது சமூக வலைதள பக்கத்தில் , 2026-ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என பதிவிட்டதும், அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுக்கள் இன்னும் பலமாகின. 2021-க்கு பிறகு 2026 தேர்தலில் அதிமுக – பாஜகவுடன் கூட்டணி வைக்க உள்ளது என்ற பேச்சுக்கள் எழுந்த நிலையில் அதனை எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார் .
டெல்லி விமான நிலையத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து பேசினார். ” முழுக்க முழுக்க மக்கள் பிரச்சனை குறித்து தான் நாங்கள் பேசினோம். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. அதற்குள் பேச்சுவார்த்தை நடத்திவிட்டோம் என பத்திரிகைகளில் செய்தி வெளியிடுகிறார்கள். அதுமாதிரி எதுவும் நடைபெறவில்லை.
மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சனை பற்றி தான் பேசினோம். அதிமுக மக்கள் பிரச்னையை பேசுவதற்கு தான் சென்றோம். அதிமுக கட்சி அலுவலகத்தை நேரில் பார்வையிட்டோம்.பிறகு நேரமும் வாய்ப்பும் இருந்தால் சந்திக்கலாம் என கூறியிருந்தோம். நேரம் அளித்தார்கள் பிறகு சென்று சந்தித்தோம்.
இந்த 45 நிமிட சந்திப்பில் ஒவ்வொரு திட்டம் பற்றியும் எடுத்துரைத்தோம். நடந்தை வாழி காவிரி திட்டம், கோதாவரி இணைப்பு திட்டம் பற்றி பேசினோம். டாஸ்மாக் ஊழல் பற்றியும், அமலாக்கத்துறை சோதனை பற்றியும் பேசினோம். தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை அதிகமானதை பற்றி கூறினோம். மிக மோசமான சூழலில் தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது. இதற்கு மத்திய அரசு தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம்” என எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.