கள்ளக்கூட்டாளி பாஜகவுடன் சேர்ந்து இபிஎஸ் அரசியல் நாடகம் நடத்துகிறார்! அமைச்சர் ரகுபதி காட்டம்!
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாட்கள் என்பார்கள். ஆனால் பழனிசாமியின் புளுகு ஒரு நாள் கூட நீடிப்பதில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மனைவிக்கு நடந்த வன்கொடுமை விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளி திமுகவை சேர்ந்தவர் என்பதால் அவரை தப்பிக்க வைக்க திமுக முயற்சி செய்து வருவதாக குற்றம் சாட்டி பேசியிருந்தார். இதனையடுத்து அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுக அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ” அரசியல் இருப்பைக் காட்ட தமிழ்நாட்டு மாணவியரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி. ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மையாகிவிடும் என கோயபல்ஸ் பாணி பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார் எதிர்கட்சித்தலைவர் பழனிசாமி. திராவிட மாடல் ஆட்சியில் துணிச்சலாக பெண்கள் புகார் அளிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் புகாரளித்தவர்களுக்கு தினமும் மன உளைச்சலை ஏற்படுத்தும் விதமாக அவரது நடவடிக்கைகள் மாறி வருகின்றன.
உண்மைகளை தாங்கி கொள்ள முடியாமல் அற்ப அரசியலில் ஈடுபடும் பழனிசாமி ஏதையோ மறைப்பதாக உளறி வருகிறார். இந்த வதந்தி அரசியல் எல்லாம் ஒரு நாளும் மக்களிடம் எடுபடாது. சரித்திரப் பதிவேடு குற்றவாளியை கண்காணிக்காதது ஏன் என பொங்குகிறார் பழனிசாமி கடந்த 2014 முதல் 2019 வரையில் தான் ஞானசேகரன் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளான் அப்போது யார் ஆட்சி செய்தது என்பதை பழனிசாமி மறந்துவிட்டாரா.?
பல குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க பழனிசாமி ஆட்சி என்ன முயற்சி எடுத்தது? பாலியல் குற்றம் செய்தவனை வெறும் திருட்டு வழக்கு மட்டும் போட்டு குற்றவாளியை தப்பிக்கவிட்ட மோசமான ஆட்சி தான் பழனிசாமியின் ஆட்சி. அப்போதே கடுமையாக தண்டித்திருந்தால் இன்று இதுபோன்ற நிகழ்வே நடந்திருக்காது.
தனது கள்ளக்கூட்டாளி பாஜகவுடன் சேர்ந்து அவர் அரசியல் நாடகம் நடத்தி வருகிறார் பழனிசாமி. அச்ச உணர்வை மாணவிகளிடமும் பெற்றோரிடமும் ஏற்படுத்தும் உள்நோக்கம் என்னவென்று மக்கள் புரிந்து கொள்வார்கள்.கூசாமல் பொய் சொல்வதில் பச்சை பொய் பழனிசாமிக்கு நிகர் யாரும் இல்லை என்கிற அளவில்தான் அவர் கூறிய நிகழ்வுகள் இருக்கின்றன. பொள்ளாச்சி வழக்கினை CBI க்கு உடனடியாக மாற்றினேன் என பெருமையாக கூறுகிறார்.
அதிமுகவின் முக்கிய புள்ளிகள் மறைமுகமகாவும், அதிமுகவின் பொள்ளாச்சி நகர இளைஞரணி செயலாளர் அருளானதம் முக்கிய குற்றவாளியாக இருந்ததாலும், எடப்பாடி பழனிசாமி மீது துளியும் நம்பிக்கை இன்றி பொதுமக்கள் , மாணவர்கள், எதிர்கட்சிகள் நடத்திய கடும் போராட்டத்தால் CBI யிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. ஆனாலும் ஒன்றிய பாஜகவோடு அதிமுகவின் கள்ளக்கூட்டணி தொடர்வதால் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்னும் விசாரணை முடியாமலேயே இருக்கிறது.
பொள்ளாச்சி முதல் அண்மையில் இராமேசுவரத்தில் குளியலறையில் கேமரா வைத்து கைதானவர்கள் வரை பாலியல் குற்றவாளிகளின் புகலிடமாக அதிமுகவே இருந்து வருகிறது என்பது கண்கூடு. தனது அரசியல் இருப்பை காட்டிக்கொள்ள அண்ணா பல்கலைக்கழக வழக்கை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவருக்கு நாளும் உளவியல் துன்புறுத்தலை ஏற்படுத்தும் கேவலமான, இழிவான, அருவருப்பு அரசியலை பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாட்கள் என்பார்கள் ஆனால் பழனிசாமியின் புளுகு ஒரு நாள் கூட நீடிப்பதில்லை. அந்த விரக்தியில் திரும்ப திரும்ப அதே பொய்களை பேசி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நினைக்கிறார் பழனிசாமி” எனவும் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
அரசியல் இருப்பைக் காட்ட தமிழ்நாட்டு மாணவியரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி
அருவருப்பு அரசியல் செய்கிறார சேடிஸ்ட் மனநிலையையை பழனிசாமி நிறுத்த வேண்டும்
ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மையாகிவிடும் என கோயபல்ஸ் பாணி…
— எஸ்.ரகுபதி (@regupathymla) December 31, 2024