விஜயின் த.வெ.க-வில் இணையும் அதிமுக முக்கியப் புள்ளி.? இ.பி.எஸ் ரியாக்சன் என்ன.?
அதிமுகவில் அமைப்பு செயலாளராக செயல்பட்டு வரும் செஞ்சி ராமச்சந்திரன், த.வெ.க-வில் இணையவுள்ளதாக வெளியான செய்தி வதந்தி என எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்துள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் தலைமையில் தொடங்கப்பட்டுள்ள அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் பிரபல அரசியல் கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள் இணைய உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது.
வரும் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ள மாநாட்டில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் விஜய் முன்னிலையில் த.வெ.க கட்சியில் இணைய உள்ளனர் என கூறப்படுகிறது. குறிப்பாக 50 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்ட அதிமுக மூத்த நிர்வாகியும் , அக்கட்சியின் அமைப்பு செயலாளருமான செஞ்சி ராமச்சந்திரன் த.வெ.கவில் இணைய உள்ளார் என கூறப்படுகிறது.
இந்த செய்தி குறித்து இன்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ” த.வெ.கவில் அவர் இணைய உள்ளதாக அவரே சொன்னாரா.? இது திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தி. அதிமுக ஒரு கடல் போன்றது. அவர் போல ஆயிரக்கணக்கானோர் கட்சிக்காக உழைத்து வருகின்றனர். 30 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த கட்சி. இது பொன்விழா கண்ட கட்சி. செஞ்சி ராமச்சந்திரன் பற்றி திட்டமிட்டு வதந்தி பரப்புகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது” என கூறினார்.
“செஞ்சி ராமச்சந்திரன் போல உழைக்க அதிமுகவில் ஆயிரம் பேர் இருக்கிறார்கள்” என்ற எடப்பாடி பழனிசாமியின் கூற்று, அவர் சென்றாலும் அதிமுகவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பது போல இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
அதே நேரம், அதிமுகவில் தனக்கு உரிய முக்கியத்துவம் தற்போது கொடுக்கப்படவில்லை என்றும், அதனால் தனது ஆதரவாளர்களுடன் த.வெ.க கட்சியில் இணையலாமா என்ற ஆலோசனையில் செஞ்சி ராமச்சந்திரன் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் உலா வருகின்றன.